முழு ஊரடங்கில் தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறியவர்கள் மீது காவல்துறையினர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையுள்ள அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கும் வகையில் மல்லிகை, காய்கறி, பழம், இறைச்சி, மீன் போன்ற சில கடைகளை மட்டும் காலை 10 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளிவர வேண்டும் எனவும் அவ்வாறு வரும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதில் சிலர் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கூடி நின்று பேசுவது, ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் பகுதியில் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றுவதாகவும், சாலை ஓரங்களில் சமூக இடைவெளி இன்றியும் முக கவசம் அணியாமலும் கூடிநின்று பேசுவதாகவும் புகார் வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் உள்ள நிலையில் தேவையின்றி சுற்றுபவர்களுக்கும் மற்றும் சாலை ஓரமாக உட்கார்ந்து பேசுபவர்கள் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.