சுமார் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரை சுற்றி இருக்கும் 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் பள்ளிவாசல் பஜார் வழியாகத்தான் போக வேண்டும். இங்கிருந்து தான் திருச்செந்தூர், பெங்களூரு, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகள் புறப்படும்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக அந்த இடத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே அந்த இடத்தில் இருக்கும் பள்ளத்தை மேடாக்கி தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.