சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கின்னகொரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்தில் இவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு சிறுத்தை பசு மாட்டின் மீது பாய்ந்து கடித்து குதறியதால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இதனையடுத்து தனது மாடு வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த நட்ராஜ் அங்கு சென்று பார்த்த போது மாடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின் நடராஜ் கூறும் போது, இதுவரை தனக்கு சொந்தமான 5 மாடுகள் சிறுத்தைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாக சோகத்துடன் தெரிவித்துள்ளார்.