மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கும் நிலையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையின் காரணமாகவும் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து உள்ளது.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இது படிப்படியாக உயர்ந்து தற்போது வினாடிக்கு 35ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி நீர் பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை காட்டிலும் வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம். உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டம் தற்பொழுது 115.11 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையின் நீர் இருப்பு என்பது 5.88 டிஎம்சி ஆக உள்ளது.