வேலூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதன்படி குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி வாகனங்களில் சுத்தி திரிபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்த 20 பேருக்கு 200 ரூபாய் வீதம் 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்ளி கூட்ரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். அப்போது ஊரடங்கின் போது சுற்றி திரிந்த வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த 60 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
மேலும் குடியாத்தம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டி தலைமையில், நேதாஜி சவுக் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அங்கு 50 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து வாகனங்களை பெறுவதற்காக வாலிபர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு, நேதாஜி சிலையை 10 முறை சுற்றிவந்த பிறகுதான் அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.