வேலூரில் காவலரை தாக்கிய கைதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி தாலுகா பாரதி நகரைச் சேர்ந்த மாபாஷா என்பவரை திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சிறைச்சாலை வளாக கண்காணிப்பு பணியில் காவலர் உமையன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்ற மாபாஷாவை காவலர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் கோபுர பகுதிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து காவலர் மாபாஷாவிடம் அங்கு செல்ல அனுமதி கிடையாது அறைக்குள் செல்லும்படி கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத மாபாஷா காவலரிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளார். ஆனாலும் காவலர் அவரை கோபுர பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாபாஷா காவலர் உமையனை தாறுமாறாக தாக்கியது மட்டுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெய்லர் மோகன்குமார் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காவலரை தாக்கிய மாபாஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.