தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கழுத்தில் குடத்தை மாட்டி பரிதவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ-காவியா என்ற தம்பதிகளுக்கு 6 வயது ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவரும் வீட்டிற்கு வெளியில் உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெண் குழந்தை கதறி அழ ஆரம்பித்தாள். என்ன என்று அவரது பெற்றோர்கள் பயந்து போய் பார்த்தபோது சிறுவன் குடத்தை தலையில் மாட்டிக் கொண்டு வெளியில் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
இதையடுத்து பெற்றோர்களும் முயற்சிசெய்து தலையிலிருந்து குடத்தை எடுக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குடத்தை கட்டர் மூலம் இரண்டு மணி நேரம் போராடி தனியாக பிரித்து எடுத்தனர். அந்த ஆறு வயது சிறுவனுக்கு எந்த காயமும் இல்லாமல் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.