கொரோனா தொற்றுக்கு பயந்து பொதுமக்கள் தங்களின் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டி வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டாகாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பானையங்கால் கிராம பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கும் தொற்று பரவிடுமோ என்ற அச்சத்தில் அவர்ரவர் தெருக்களில் வேப்பிலை தோரணங்களை கட்டி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து பொதுமக்கள் அவர்களின் வீட்டு வாசலிலும் வேப்பிலை தோரணம் கட்டி வைத்துள்ளனர். இது குறித்து அந்த கிராமத்தில் ஒருவரிடம் கேட்கும் போது தங்களின் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காரணத்தினால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தொற்று பரவும் என அச்சப்பட்டு வேப்பிலை தோரணங்களை தெருக்களிலும் வீட்டுவாசல்களிலும் கட்டியுள்ளதாக கூறினார். அதன் பின் பொதுமக்களின் பயத்தைப் போக்கும் விதமாக அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத் துறையினர்கள் பரிசோதனை செய்து அவர்களிடையே விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்கள்.