கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான அப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தனது மனைவியின் நடத்தை பற்றி கோபிக்கு தெரியவந்ததால் அவரை கண்டித்துள்ளார். அதன் பிறகு சுரேஷிற்க்கும், கோபிக்கும் இடையே அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபத்தில் தனது வீட்டிற்கு வந்த கோபி கன்னியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேசை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்ட சமயத்தில் சுரேஷும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.