ஊரடங்கின் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித் வருவதையும், மரத்தடி மற்றும் சாலை ஓரங்களில் சமூக இடைவெளியின்றியும், முகவசம் அணியாமலும் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதையும் கண்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அபாயம் உள்ளதால் சாலையோரம் அமர்ந்து பேசுபவர்களையும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீதும் காவல்துறையினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின்படி கச்சராபாளையம் காவல்துறையினர்கள் அம்மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். அதில் 60 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, இதில் முக கவசம் அணியாமல் வந்த 100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது மட்டும் இல்லாமல் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் வருவாய் துறை சார்பாக சின்ன சேலம் தாசில்தார் ராஜலட்சுமி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கச்சராபாளையம் பகுதிகளில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு காலை 10 மணிக்கு மேல் திறந்து வைத்திருந்த கடைகளை அடைக்கும்மாறு எச்சரிக்கை செய்துள்ளார்.