1968- காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது 51 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 12 பி. எல் – 534 என்ற விமானம் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 98 வீரர்களும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்புமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விமானியும் சண்டிகருக்கு விமானத்தை திருப்பியபோது இமாச்சலில் உள்ள ரோதங் கணவாய் அருகே திடீரென மாயமானது.
இதையடுத்து இந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் பனி மலை முழுவதும் தேடியும் விமானத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் தேடும் பணியை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த விமானத்தின் உடைந்த சில பாகங்கள் மற்றும் சில வீரர்களின் உடலும் கடந்த 2018- ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியியில் தோக்ரா ரெஜிமண்ட் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த தேடுதலின் போது இமாச்சலில் உள்ள லாஹால் – ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள சிகரத்தின் அருகே விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பனிப்பாறைகளுக்கு இடையே கிடந்த விமானத்தின் எரிபொருள் டேங்க், காக்பிட் கதவு, விமான எஞ்சின், ரெக்கை விமானத்தின் உடற்பகுதி, மின்சார இணைப்புகள் உட்பட பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் சில வீரர்களின் உடல்களும் கிடந்தன. இது 1968-ஆம் ஆண்டு மாயமான விமானத்தின் பாகங்கள் தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.