கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பள்ளி வாகனம் தயார் நிலையில் உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் தற்போது மருத்துவமனையில் படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நோயாளிகளை அழைத்து வருவதற்கு வாகன வசதியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நமது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மக்களும் பல்வேறு உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பலர் இந்த நிவாரண திட்டத்திற்கு நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று தங்களுடைய பள்ளி வாகனங்களில் மூன்றை ஆக்சிஜன் கூடிய இருக்கை வசதிகளாக மாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தில் இருக்கைகள் வசதியுடன் கூடிய மின்விசிறி வசதியும் மூன்று பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கொரோனா காலம் முடியும் வரை பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் நேற்று மருத்துவமனையில் வாகனங்களை ஒப்படைத்துள்ளது. இந்த முயற்சியை எடுத்த பள்ளி நிர்வாகத்தினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.