வெளிச்சந்தையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும் காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் வெளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையில் மனைவியின் நடத்தையில் ரமேஷ்க்கு சந்தேகம் ஏற்பட்டு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் ரமேஷின் வீட்டிலிருந்து குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு உமா கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் உமாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உமா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், ரமேஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக ரமேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.