திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில், நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றி வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 24 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒரு தளர்வும் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ,ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் ,வெளியே சுற்றி வந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டான சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன் , முரளி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழக – ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியான, திருப்பதி- நெல்லூர் சாலையில் , தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ள போலீசார் , இ- பதிவு முறை இருந்தால் மட்டுமே ,வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.