அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு கொரோனா தொற்றுடன் வருபவர்கள் உடனடியாக இந்த சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நோயாளிகளை பரிசோதித்து பார்த்த பிறகு அவர்களின் தேவைக்கேற்ப சாதாரண படுக்கையிலோ அல்லது ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கையிலோ அனுமதிக்கப்படுவர். இதனால் ஆக்சிஜனுக்காக நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் தவிர்க்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இந்த சிறப்பு வார்டில் உள்ள அனைத்துப் படுக்கைகளிலும் அட்ஜஸ்டர் என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த கருவி வெளியே இருக்கும் காற்றை உள்வாங்கி நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை பிரித்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.