தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிக கனமழை அதாவது பேய் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு நிலவுவதாகவும் இதனால் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனம் முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.