தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை மீறி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.
அவ்வாறு சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் ஊரடங்ககை மீறி வீதியில் சுற்றிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வெளியே சுற்ற வேண்டாம் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நூதன முறையில் போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொண்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் சிலர் இதனையே தொடர்கதையாக்கி வருவதால் போலீசார் அவர்களை நிறுத்தி எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்துள்ளனர்.