Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விரைவில் உற்பத்தி தொடங்கும்… படிப்படியாக நடைபெறும் சோதனை… அதிகாரிகளின் தகவல்…!!

ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதி அளிக்க வேண்டுமென தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த கோர்ட் ஆலையில் ஆக்சிஜனை  உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்திற்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூலம் 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு திடீரென குளிர்விக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதை சரி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்துள்ளனர். அதன்பின் பழுதை கண்டுபிடித்து அதனை சரி செய்த பிறகு முறையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறதா என படிப்படியாக இயக்கி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையின் முடிவில் பழுது முழுமையாக சரி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |