ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வந்தது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மே 15ம் தேதி வரை ஆஸ்திரேலியா, இந்திய விமான சேவைக்கு தடை விதித்திருந்தது இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் மாலத்தீவில் தங்கியிருந்தனர் . இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தடை காலம் முடிவுக்கு வந்ததால், இன்று விமானங்கள் மூலம் 38 பேர் சிட்னிக்கு சென்றனர். அங்கு சென்ற பின் வீரர்கள், 2 வாரம் தனிமைப்படுத்துதல் முடிந்தபிறகு வீட்டிற்கு செல்வார்கள். இந்த சூழலில் ஆஸ்திரேலிய வீரர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைத்த பிசிசிஐக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சிஇஒ நிக் ஹாக்லே நன்றி தெரிவித்துள்ளார்.