கர்ணன் படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுக்காதது குறித்து நடிகர் லால் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏமராஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் லால். இந்நிலையில் கர்ணன் படத்தில் நடிகர் லால் தனது சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த லால் ‘மொழி, கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படம் கர்ணன். இந்த படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்டது . சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் திருநெல்வேலியில் தமிழ் மொழி வித்தியாசமாக இருக்கும். என்னால் தமிழ் மொழியை அந்த வட்டாரங்களுக்கு ஏற்ப சரியாக உச்சரிக்க முடியாது . என்னுடைய மொழி மட்டும் இந்த படத்தில் தனியாக தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. இதனால் எனது சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை, திருநெல்வேலி சேர்ந்த ஒருவரின் குரல் பயன்படுத்தப்பட்டது’ என கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.