மயூரநாதர் கோவில் யானைக்கு கபசுர குடிநீர் வழங்கி மூலிகை சாம்பிராணி புகை போட்ட பாகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்று மனிதர்களிடையே மட்டும் பரவாமல் விலங்குகளுக்கும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வன ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயூரநாதர் திருக்கோவில் சார்பாக கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த கபசுரக் குடிநீரை யானைப்பாகன் வினோத் மயூரநாதர் கோவில் யானை அமயாம்பாளுக்கு வழங்கியுள்ளார். மேலும் அந்த யானைக்கு அவர் மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்த சம்பவத்தை பார்த்த பக்தர்கள் யானைப் பாகனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.