நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் நல்லியாம்பாளையத்தில் முருகேசன் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகள் பிரியதர்ஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயதான பிரியதர்ஷினி உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆகியவை கடைபிடித்து வந்துள்ளார்.
ஆனால் எதுவும் பயனளிக்காத நிலையில் உடல் பருமனை குறைப்பதற்கு இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனையடுத்து சாப்பிடாமல் இருப்பதற்கு மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 13ம் தேதி எலுமிச்சைசாறில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனைஅறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.