கொரோனா பாதுகாப்பு சுகாதார பணிகளை மேற்கொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கொரோனா காலம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் எந்தவித பாதுகாப்பு சுகாதார பணிகளும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலை ஏற்பட்டும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் எந்த சுகாதார பணிகளும் அப்பகுதியில் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் இணைந்து ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் தாமாகவே கலைந்து சென்றுள்ளனர்.