விற்பனை குறைவாக இருப்பதால் தினசரி 50 டன் மாம்பழங்கள் தேகம் அடைகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே வியாபாரிகளுக்கு அதிக அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வைத்தால் அவை சீக்கிரம் அழுகி விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாம்பழம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியின் பழ வியாபாரிகள் கூறும்போது, ஒடையகுலம், சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவிலான மாம்பழங்கள் வியாபாரத்திற்காக மார்கெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டாலும் காலை 10 மணிக்கு கடைகளை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாம்பழங்களின் விற்பனை குறைந்த அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த மாம்பழங்களை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை உள்ளது. இதனால் தினசரி 50 டன் மாம்பழங்கள் தேக்கம் அடைவதால், அதனை குறைந்த விலைக்கு வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பகல் 1 மணிவரை கடை விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.