ஆந்திர மாநிலம் செல்லூர் என்ற பகுதியில் சாமியார் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருப்பதியில் பெயிண்டர் வேலை செய்யும் மங்கு நாயுடு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாமியார் ராமசாமி, மங்கு நாயுடுவிடம்திருப்பதி மலை அடியில் குறிப்பிட்ட தொலைவில் 120 அடி தொலைவு வரை சுரங்கம் தோண்டினால் இறுதியாக இரண்டு அறைகள் வரும். அதில் அதிக அளவு தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட பெரும் புதையல் உள்ளது என்று சாமியார் கூறியுள்ளார். அதற்கான வழிகளை நான் காட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அந்த சாமியார் பேச்சை நம்பிய மங்கு நாயுடு, கூலித் தொழிலாளர்களை அழைத்து கொண்டு கடந்த ஓராண்டிற்கு மேலாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா காலனி பகுதியில் இருந்து மலைக்குச் சென்று வனப் பகுதியில் சுரங்கம் தோன்றியுள்ளார். தற்போது 80 அடி தொலைவுக்கு சுரங்கம் தோன்றியுள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மங்கு நாயுடுவை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.