ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை–நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஷஸ் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் 378 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட்டில் பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால், தடை காரணமாக கடந்த ஒரு வருடம் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.