தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததால், ஓரளவுக்கு மக்கள் வெளியே சுற்றாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 5 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவதாகவும், மே 11ஆம் தேதி 25 சதவீதம் இருந்த பாதிப்பு தற்போது 19 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருவதால் இந்த மாதம் இறுதிக்குள் தொற்று பெருமளவு குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.