தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன
மேலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியுள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இவ்வாறு மருந்துகளையோ அல்லது ஆக்சிஜன் சிலிண்டர்களையோ கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கூடுதல் விலைக்கு மருந்து விற்றாலோ, அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெற்றாலோ எந்த நிலையில் உள்ள அலுவலர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களும் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.