பட்டப்பகலில் வீட்டிற்குள் கரடி நுழைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் பணங்குடி கிராமத்தில் வசிக்கும் ராமர் என்பவரது வீட்டுக்குள் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்து விட்டது. இதனையடுத்து அந்த கரடி வீட்டில் ஏதேனும் உணவு இருக்கின்றதா என சுற்றி பார்த்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மேலும் கரடி வந்து சென்ற காட்சிகள் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கூறியதாவது “பட்டப்பகலிலேயே காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால் அச்சமாக இருக்கிறது. மேலும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.