உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு தோல் நோய் இருப்பதாக கூறி மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயதான முன்ஷி சிங் யாதவ் என்ற நபர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் தோல் வியாதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் அவரை தொடக்கூட அஞ்சி வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கான்ஸ்டபிள் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.
இதில் பிள்ளைகள் கடும் காயத்துடன் உயிர் தப்பினர். பிறகு அவர் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கான்ஸ்டபிளின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.