கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்றுள்ள, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள், கடந்த 4ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் ,முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் தலைமறைவாகியுள்ள சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் உட்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சுஷில்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் டெல்லி போலீசார் அனைத்து விமான நிலையத்திற்கும், லுக்அவுட் நோட்டீஸ் . அத்துடன் டெல்லி போலீசார் வீரர் சுசில்குமார் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையாகவும், அவருடைய நண்பரான அஜய் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தனர். இந்தநிலையில் வீரர் சுஷில் குமார் போலீசாரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி நீதிமன்றம் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.