இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தது. அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர்களுக்கும் தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை சிபிஎஸ்இ வாரியத்திடம் பள்ளிகள் ஒப்படைப்பதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.