கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சை அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எதிரணுக்களை பிரித்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு செலுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சிகிச்சைக்கு பெயரே பிளாஸ்மா சிகிச்சை. இந்த சிகிச்சை கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே கொரோனா பாதித்தவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்துவது பற்றி கடந்த சில நாட்களாக இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்கள் ஆய்வு செய்து வந்தனர். இறப்பு வீதத்தை எந்த முறையிலும் பிளாஸ்மா சிகிச்சை குறைக்கவில்லை என்ற காரணத்தினால் அதிகாரபூர்வமாக இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை கைவிடப்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது.