தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியிலும் சென்னையில் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையர்களாலும், சுகாதாரத்துறையினராலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் வீடு வீடாக சென்று மக்களுடைய குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தமிழக அரசு வெல்லும்” என்றும் தெரிவித்துள்ளார்.