“நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், புபிந்தர் சிங் ஹூடா அகமது பட்டேல் ஆகியோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பலரும் அவரது பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.