நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படியும், அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்டூ மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் குழு அமைக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். விடைத்தாளில் பெயர், பதிவு எண் கட்டாயம் எழுதவேண்டும். மாணவர்கள் விடையை தனி தாளில் எழுதி தனது பெற்றோர் கையொப்பம் பெற்று PDF ஆக அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த வாட்ஸ்அப் குழுவில் வேறு செய்திகள், வீடியோக்களை அனுப்ப கூடாது.