நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தண்ட நாடு பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அதிகமாக ஏற்பட்டு கொத்துக் கொத்தாக மரத்தில் தொங்கி வருகிறது. இதனை சாப்பிடுவதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் முன்பு அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டிவிட வேண்டும் என்று ஊர்மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்ததை தொடர்ந்து, காட்டு எருமைகள் ஊருக்குள் புகுந்தது ஊர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.