இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் தடுப்பூசி முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என போடப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை மூன்று மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் குணமடைந்த மூன்று மாதங்களுக்கு பிறகே அடுத்த டோஸ் போட வேண்டும் என கூறியுள்ளது.