தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டில் 150 மேலான காய்கறி கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஆனால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று அதிகம் பரவ அபாயம் உள்ளதாக அந்த மார்க்கெட் கடந்த 15ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதோடு மட்டுமில்லாமல் காய்கறிகள் அனைத்தும் வீணாகி விடுகின்றது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் கே. எம். அருள்செல்வன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டதால் வியாபாரிகளுக்கும் மட்டுமே பயனுள்ளதாக இருக்கின்றது.
ஆனால் தாங்கள் விளைவித்த பொருட்களை இந்த நேரத்திற்குள்கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியாளர் சமீரன் என்பவர் மார்க்கெட் நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்று முதல் அந்த மார்க்கெட் செயல்படும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களை கடையின் உரிமையாளர்களே விலை தீர்மானம் செய்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும் காய்கறி கடைகள் அரசு உத்தரவிட்ட படியே காலை 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.