அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் கீழ் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் மருத்துவமனைக்கு போவதாகவும், மருந்து வாங்க செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் சிலர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தது மட்டுமில்லாமல் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதனால் அவர்களை உடனடியாக அமரவைத்து சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை சேகரித்து உள்ளனர்.