தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சிறப்பு அலுவலர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். குழுவில் இடம் பெற்ற அலுவலர்களின் பெயர் மற்றும் பதவி உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த அலுவலர்களே பொறுப்பு என உத்தரவிட்டுள்ளார்.