காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி அடித்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட புருஷோத்தமன் இன்று காலை தன்னை விரட்டியடித்த மக்களை பலி வாங்க எண்ணியுள்ளார். இதையடுத்து அரிவாளுடன் கிராமத்திற்குள் சென்ற புருஷோத்தமன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தனஞ்செயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிலும் இரண்டு பேருக்கு உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை இன்று இரவுக்குள் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.