இஸ்ரேல் இராணுவம், காசா மீதான தாக்குதல்களை நிறுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல், கடந்த பத்தாம் தேதியில் ஆரம்பித்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. காசா நகரிலிருந்து ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி காசாவில் சுமார் 219 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1500க்கும் அதிகமான நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று இஸ்ரேலில் 12 நபர்கள் உயிரிழந்ததோடு 300க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் போர் சூழல் உருவாகும் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே சர்வதேச சமூகம், அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை தடுக்க வேண்டும். எனவே உடனடியாக இருதரப்பினரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
மேலும் இஸ்ரேல் ராணுவம் இது குறித்து கூறுகையில், காசா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முழு ஏற்பாடுகள் தொடரப்பட்டு வருகிறது. எனவே தற்போது இந்த தாக்குதல்களை நிறுத்த வாய்ப்புகள் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளது.