அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு சான்றிதழ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதியிலும், பழைய மாமல்லபுரம் சாலையிலும் செம்மஞ்சேரி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்களை நிறுத்தி இ-பதிவு சான்றிதழ் வைத்திருக்கிறார்களா என சோதனை நடத்தியுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.