பழைய பொருட்கள் வைத்திருந்த குடோன் திடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் இருக்கின்றது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனில் ஒரு பகுதியில் எதிர்பாராவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவி விட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஸ்ரீ பெரம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின் படி ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையால் தீ அதிகமாக எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரமாக போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்துவிட்டனர். மேலும் இந்த விபத்தில் குடோனில் இருந்த அட்டைகள், கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து அழிந்துவிட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓரகடம் காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.