உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை உலக அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது.
கிரீன்பீஸ் என்ற உலகளாவிய அமைப்பு உடல் ஆரோக்கியத்திற்கு அதிகத் தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை மாநகரம் உலகிலேயே 29வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதிர்ச்சி புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் SO2 என்று அழைக்கப்படும் சல்பர் டை ஆக்சைடை அதிகம் வெளியிடும் நகரங்களில் இந்திய அளவில் சென்னை ஏழாவது இடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் மிகவும் மோசமான நோய்கள் தாக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ஆஸ்துமா, சுவாச கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என்றும் சுற்றுச்சூழலல் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையின் காற்று மாசுபாட்டுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மற்றும் வட சென்னையில் செயல்படும் அனுமின்நிலையம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன.
சென்னை மாநகர காற்றில் சல்பர் டை ஆக்சைடு கலப்பது முன்பை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சல்பர் டை ஆக்சைடு 60% மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த சூரிய ஒளி, உள்ளிட்ட தூய மின்சாரம் தயாரிக்கும் முறையை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.