மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து காய்களை உரிப்பதற்காக சிவகுமார் என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேங்காய் உரித்துக் கொண்டிருக்கும்போது மாரியப்பன் கையிலிருந்த இரும்பு கம்பியை நிலத்தில் ஊன்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியானது அருகிலிருந்த மின் ஒயரில் பட்டதால் மாரியப்பன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.
அதன் பின் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாரியப்பனை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.