சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிருங்ககோட்டை, பிரான்மலை, எஸ்.வி.மங்களம், காளாப்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே சமயம் மழைநீர் கழிவு நீருடன் கலந்து சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்கு ஒருவிதமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வேறு வழியில்லாமல் தெருக்களில் வந்து நின்றுள்ளனர்.
எனவே அப்பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாகனேரி, கல்லல் ஆகிய பகுதிகளில் திடீரென நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மழை பெய்துள்ளது. அந்த மழையானது சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்துள்ளது. கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென்று மழை பெய்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.