விருதுநகர் மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சி விலை உயர்வை தொடர்ந்து பொதுமக்கள் கருவாடு வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த நிலையில் கருவாடு விளையும் சற்று உயர்ந்துள்ளது.
கொரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடித்து வரும் நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் அனைவரும் காலையிலேயே காய்கறி மற்றும் இறைச்சிகளை வாங்க கடைக்கு செல்கின்றனர். இதனையடுத்து இறைச்சி மற்றும் மீன் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
அதன்படி ஆட்டு இறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 200 ரூபாய்க்கும், அயிரை மீன் ஒரு கிலோ1,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இத்தகைய விலையேற்றத்தால் பொதுமக்கள் தற்போது கருவாடு வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் தற்போது கருவாடும் சற்று விலை உயர்ந்துள்ளது. நெய் மீன் கருவாடு கிலோ 2600 ரூபாய்க்கும், நெத்திலி கருவாடு கிலோவிற்கு 400 ரூபாயும், மற்றும் சூடை கருவாடு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.