தே.மு.தி.க பிரமுகர் ஊரடங்கு நேரத்தில் வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுடிவாக்கம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகு மற்றும் பிரதாப் சாகு என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் சுரேஷ் ராஜ் என்பவர் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை தனது வீட்டில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.
இந்த தொழிலாளர்கள் மூன்று மாத வாடகை பாக்கியான 2 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பணத்தை சுரேஷ்க்கு கொடுக்கவில்லை. மேலும் இந்த வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர். இதனை அறிந்த உடன் சுரேஷ் ராஜ் தனக்கு தரவேண்டிய வாடகை பாக்கியை கேட்டு அந்த தொழிலாளர்களை பிளாஸ்டிக் பைப்பினால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதனையடுத்து வலி தாங்க முடியாமல் அந்த தொழிலாளர்கள் சுரேஷின் காலில் விழுந்து கதறிய போதும் சுரேஷ் அவர்கள் தொடர்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து குன்றத்தூர் காவல் துறையினர் சுரேஷ் ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் வட மாநில தொழிலாளர்கள் அடித்து சித்திரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.